இடைத்தேர்தல் முடிந்ததும் 3 ஆயிரம் பட்டா வழங்கப்படும்ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு


இடைத்தேர்தல் முடிந்ததும் 3 ஆயிரம் பட்டா வழங்கப்படும்ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
x
தினத்தந்தி 14 Feb 2023 1:00 AM IST (Updated: 14 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

ஈரோடு

இடைத்தேர்தல் முடிந்ததும் 3 ஆயிரம் பட்டா வழங்கப்படும் என்று ஈரோட்டில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

அமைச்சர் பிரசாரம்

ஈரோடு முனிசிபல்சத்திரம் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவருடன் சேர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜோதிமணி எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்கள்.

வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-

இந்த பகுதி பெரியாரால் உருவாக்கப்பட்டது. உங்களது தேவைகள் எனக்கு தெரியும். எனது மகன் திருமகன் ஈவெரா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து உள்ளார். அவர் விட்டு சென்ற திட்டங்களை நான் நிறைவேற்றுவேன்.

பட்டா

உங்களது பகுதியில் பட்டா கிடையாது என்பது எனக்கும் தெரியும். எனது வீட்டுக்கே பட்டா இல்லை. 3 ஆயிரம் பட்டா வழங்குவதற்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார். எனவே இடைத்தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு பட்டா வழங்கப்படும். உங்களோடு சேர்த்து எனக்கும் பட்டா கிடைக்கும்.

தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகு அவசியம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க வசதிகள் செய்து தரப்படும். எனது மகன் விட்டு சென்ற பணியை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பை கை சின்னத்தில் தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஈரோடு மரப்பாலம், ஆலமரத்து தெரு, கோணவாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் பிரசாரம் செய்தார்.


Next Story