தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது; 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரம்


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது; 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரம்
x

தூத்துக்குடியில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது என்றும், அவை 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது என்றும், அவை 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நிவாரண பொருட்கள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

அதன் தொடர்ச்சியாக மீண்டும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்புவதற்காக புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே உள்ள 4 சரக்கு பெட்டக முனையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

30 ஆயிரம் டன்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் அரிசி, மருந்து பொருட்கள், பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் 10 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு அவை துறைமுகம் பகுதியில் உள்ள 4 குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கப்பல் மூலம் அனுப்பப்படும்

தற்போது மூட்டைகளில் உள்ள அரிசிகளை 10 கிலோ பைகளாக பிரித்து அதில் 5 பைகளை ஒரு பண்டலாக போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், மருந்து பொருட்கள் மற்றும் பால் பவுடர் ஆகியவை சேகரிக்கப்பட்ட பின்னர் அவை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story