ரேஷன் கடை ஊழியர்கள் 301 பேர் வேலைநிறுத்தம்
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் 301 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு அளிக்க வேண்டும், பொது வினியோக திட்டத்துக்கென தனி துறையை உருவாக்க வேண்டும், 5 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து, அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி தேனி மாவட்டத்தில் வேலைநிறுத்தம் செய்தனர். 2-வது நாளாக மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
400 கடைகள் மூடபட்டன
மாவட்டத்தில் மொத்தம் 517 ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால், ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
301 பேர் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பொன்.அமைதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சேதுராம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மகாலிங்கம், மாவட்ட நிர்வாக அமைப்பு செயலாளர் சேதுராமலிங்க பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேலைநிறுத்தம் குறித்து மாவட்ட தலைவர் பொன்.அமைதியிடம் கேட்டபோது, "தேனி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் 322 பேர் உள்ளனர். அவர்களில் 301 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். நாளையும் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தம் நடக்கிறது. நாளை உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது" என்றார்.