ரூ.31½ லட்சம் நலத்திட்ட உதவிகள்
வேடசந்தூர் அருகே அம்மாபட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ரூ.31½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
வேடசந்தூர் அருகே உள்ள அம்மாப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேலும் 722 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 45 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட 882 பேருக்கு ரூ.31 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
முகாமில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லி நுண்ணூட்ட கலவை உரங்கள், நீரில் கரையும் உரங்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
முகாமில் துணை கலெக்டர் ஜெயசித்திரகலா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா, பழனி ஆர்.டி.ஓ. சரவணன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் பிரசன்னா, வேளாண் நுண்ணுயிரியலாளர் கவுசல்யாதேவி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி, சமூகநல அலுவலர் புஷ்பகலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், திட்ட அலுவலர் பூங்கொடி, தாசில்தார் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.