31-ந்தேதி பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தும் போராட்டம்; விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு


31-ந்தேதி  பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தும் போராட்டம்;  விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
x

கடந்த நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் சில்லறை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்திட வேண்டும்.

சென்னை,

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது. சில்லறை விற்பனையாளர்களாகிய எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இன்று வரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை.

கடந்த நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் சில்லறை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்திட வேண்டும். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 31-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல்-டீசல் கொள்முதல் செய்வதை அகில இந்திய அளவில் நிறுத்தம் செய்ய உள்ளோம்.இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பின்றி வழக்கமான முறையில் பெட்ரோல்-டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story