ரூ.32 கோடி கடன்கள் தள்ளுபடி
சிவகாசி தாலுகாவில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் பெற்ற ரூ.32 கோடி கடன்களை தமிழகஅரசு தள்ளுபடி செய்துள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் பெற்ற ரூ.32 கோடி கடன்களை தமிழகஅரசு தள்ளுபடி செய்துள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
திறப்புவிழா
திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு பல் நோக்கு சேவை மைய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கடன் தொகைகளை வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்திக்கொள்ளும் வகையில் கடன்களை கூட்டுறவு துறை வழங்கி வருகிறது. தற்போது திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு மையத்தின் மூலம் இந்த சங்கத்துக்கு ஒரு நிரந்தர வருவாய் ஏற்படும்.
தேர்தல் வாக்குறுதி
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது. தேர்தலின் போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்துள்ளோம். இதன் மூலம் சிவகாசி தாலுகாவில் 9,858 பேருக்கு ரூ.32 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இதே போல் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.7 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள கடன்களையும் தள்ளுபடி செய்து கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதாஇன்பம், துணைமேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ். மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரமணா நன்றி கூறினார்.