பள்ளிகள் அருகே குட்கா விற்ற 32 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி அருகே குட்கா விற்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை பாக்குகள், பல்வேறு புகையிலை பொருட்கள் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
இதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகே குட்கா விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பள்ளி, கல்லூரி அருகே அமைந்துள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் பள்ளி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 43) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் குட்கா விற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் பள்ளிகள் அருகே குட்கா விற்றதாக 32 பேரை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.