திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 320 பா.ஜனதாவினர் கைது
திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 320 பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-ந்தேதி வள்ளிகுகை பகுதியில் ஒருவர் சத்ரு சம்ஹாரமூர்த்தி யாகம் நடத்தியதாகவும், இதனால் பக்தர்கள் பாதிப்படைந்ததாக கூறி, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு நேற்று மாலை பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார்.
அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினார். அப்போது பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் உள்ளிட்டோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலும் செய்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்பட 320 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.