கோவில்பட்டியில் நகரசபை அலுவலகம் முன்பு 32-வது வார்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்
கோவில்பட்டியில் நகரசபை அலுவலகம் முன்பு 32-வது வார்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சி 32-வது வார்டு கவுன்சிலர் எம்.ஆர்.வி.கவியரசன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வார்டில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். மாணவ- மாணவிகளுக்கு உதவும் வண்ணம் நூலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 32 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.