நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில்பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளித்திருப்பது சமுதாய புரட்சி: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில்பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளித்திருப்பது சமுதாய புரட்சி: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில்பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளித்திருப்பது சமுதாய புரட்சி என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து இருப்பது சமுதாய புரட்சி என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

வரவேற்பு

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை பா.ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடு பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தவறுகளை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை, கூட்டணியில் இருந்து கொண்டு பேசி தீர்க்க முடியாத அரசு தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. காவிரி நீர் வரும், ஆனால் வராது என்ற சூழ்நிலையில்தான் தற்போது இருக்கிறது.

சமுதாய புரட்சி

பெண்களுக்கு சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது ஒரு சமுதாய புரட்சி ஆகும். இதன் மூலமாக தமிழகத்தில் 13 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 77 பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் வர முடியும். இதற்கு முன்னர் மத்திய அரசில் பெரும்பான்மையாக அங்கம் வகித்தபோது மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வரமுடியாத தி.மு.க.வினர் இந்த மசோதாவை குறை கூறுவதை ஏற்க முடியாது. அடிப்படை கட்டமைப்புகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாம் மேற்கொண்ட பின்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2028-29-ம் ஆண்டில் நிச்சயம் வரும். இந்த திட்டத்தை விமர்சிப்பவர்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள். மத்திய அரசின் நல்ல திட்டங்களில் ஒன்றான ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் அரசியலாக்க கூடாது. பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி வருகிறது. பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார்' என்று கூறினார்.


Next Story