33 மனுக்களை விசாரித்து தீர்வு காண வேண்டும்
குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 33 மனுக்களை விசாரித்து தீர்வு காண வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 33 மனுக்களை விசாரித்து தீர்வு காண வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து போலீஸ் நிலையங்களில் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மீண்டும் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
தீர்வு காண உத்தரவு
அப்போது போலீஸ் நிலையத்தில் விசாரித்து தீர்வு செய்யப்படாத விவகாரங்கள் தொடர்பாக மீண்டும் பெறப்பட்ட 22 மனுக்கள் மற்றும் புதிதாக 11 மனுக்கள் என 33 மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மேலும் அடிதடி, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவும், சொத்து, குடும்ப சண்டை வழக்குகளில் வருவாய்த்துறை, நீதித்துறை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.