ஆரணி நகராட்சியில் 33 வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு
ஆரணியில் 33 வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 4 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி
ஆரணியில் 33 வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 4 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர சபை தலைவர் ஏ. சி.மணி தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார். நகராட்சி அலுவலகத்திற்கு சுகாதார தனி அலுவலர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மோகனசுந்தரம் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டார்.
கூட்டத்தில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன் தீர்மானத்தை வாசித்தார். தமிழக அரசின் சார்பாக வார்டு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி கடிதம் வந்துள்ளது. ஆரணி நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் ஒவ்வொரு நகர மன்ற உறுப்பினர் ் தலைவராகவும், மக்கள் தொகை அடிப்படையில் 4 உறுப்பினர்களை இணைத்து 3 மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து தகவல்களை சேகரித்து நகர மன்றத்தில் உறுப்பினர் வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஆ.நடராஜன் (அ.தி.மு.க.): நாங்கள் தேர்வு செய்து கடந்த 6 மாதங்களாகவே உங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை இதில் புதிதாக ஒரு 4 நபர்களை உருவாக்கி அந்த பகுதியில் குறைகளை நிறைகளை கேட்டு எழுதித்தந்தால் மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள். விரிவாக்கப் பகுதிகளான சோலை நகர், மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் சாலை அமைக்கப்படவில்லை, கால்வாய் வசதியும் இல்லை, தெருவிளக்குகள் இல்லை இதை உடனடியாக செய்து தர வேண்டும்
வருவாய் ஆய்வாளர் மோகன்:- அங்குள்ள வீடுகளிலிருந்து வரித்தொகை வரப்பெற்றவுடன் கண்டிப்பாக அந்த பகுதியில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும்.
சமுத்ரிகா சதீஷ் (அ.தி.மு.க.):- களத்து மேட்டு தெரு பகுதியில் மழை பெய்தால் அங்கன்வாடி மையம் ஒழுகும் நிலையில் உள்ளது/அவற்றினை சீரமைத்து தர வேண்டும்.
அங்கன்வாடி மையம்
நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி: களத்து மேட்டு தெரு உள்பட 5 அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.
ஆர்.எஸ்.பாபு (தி.மு.க.): ஆரணி 4-வது வார்டு புதுகாமூர் ரோடு பகுதி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் மினி பவர் பேங்க் வேண்டும். ஆரணிப் பாளையத்திலிருந்து புதுகாமூர் செல்லும் சாலையில் 4 குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.
அப்போது நகராட்சி தலைவர் ஏ.சி.மணி, ''உங்கள் பகுதியில் 4 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதன் படி தேர்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறி கூட்டத்தை முடித்தார்.