கேரளாவிற்கு கடத்த பதுக்கிய 330 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவிற்கு கடத்த பதுக்கிய 330 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஆலங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 330 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


ஆலங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 330 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திடீர் சோதனை

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று அதிகாலை ஆலங்குளம் அருகே சுண்ட குளத்தில் கல்குவாரி அருகில் ஆஸ்பொஸ்டாஸ் கூரையுடன் உள்ள ஒரு கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர்.

அந்தக் கிட்டங்கியில் தலா 50 கிலோ கொண்ட 330 பாலிதீன் சாக்குமூடைகளில் 16.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. மேலும் ஒரு லாரியும், ஒரு மினி லாரியும் அங்கு நின்று கொண்டிருந்தது. லாரி மற்றும் மினிலாரியுடன், 330 ரேஷன் அரிசி மூடைகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

ரேஷன் அரிசி பதுக்கல்

விசாரணையில் அந்த கிட்டங்கி ஆலங்குளத்தை சேர்ந்த பசும்பொன் என்ற ரமேசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் இந்த ரேஷன் அரிசியை நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த சேர்ந்த முத்து என்ற பேச்சி முத்து (வயது35) என்பவருக்காக கோவில்பட்டியைச் சேர்ந்த பூல் பாண்டியன் என்பவர் கோவில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் சேகரித்து ஊருக்கு வெளியே உள்ள பகுதியான இந்த கிட்டங்கியில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் இந்த ரேஷன் அரிசியை சேகரிக்க கோவில்பட்டி கூசாலிப்பட்டியை சேர்ந்த கிறிஸ்டியன் பாலா (22), பாஸ்டின் (34) ஆகியோர் உதவிகரமாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்படி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்து என்ற பேச்சிமுத்து, கிறிஸ்டியன் பாலா, பாஸ்டின், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பூல் பாண்டியனையும், பசும்பொன்என்ற ரமேசையும் தேடி வருகின்றனர். இந்த அரிசி மூடைகள் கேரளாவிற்கு கடத்துவதற்காக இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.


Next Story