சாலை மறியலில் ஈடுபட்ட 332 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 332 பேர் கைது
x
திருப்பூர்


மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து அவினாசி, ஊத்துக்குளி, பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் 332 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், பனியன், விசைத்தறி, பஞ்சாலை, சிறு, குறு, தொழில்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். ரூ.6 ஆயிரத்திற்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர் நலசட்டங்கள் 44-ல் உள்ள தொழிலாளர் உரிமையை பறித்து 4 சட்டங்களாக மாற்றுவதை கண்டித்தும், பல லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்ததை கண்டித்தும், திருப்பூர் சுப்பராயன் எம்.பி. உள்ளிட்ட 11 பேர் கொண்ட பாராளுமன்ற குழுவின் முடிவை அமல்படுத்த கோரியும், நூல் ஏற்றுமதி மற்றும் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கும் பனியன், விசைத்தறி, பஞ்சாலை, தொழிலை பாதுகாத்திடவும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 83 பெண்கள் மற்றும் 68 ஆண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை விடுதலை செய்தனர். ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மோகன், செயலாளர் பழனிச்சாமி, தாலுகா செயலாளர் கேசவன் உள்பட 115 ேபரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்

பல்லடத்தில் நடந்த மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட 66 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story