மைக்கேல்பட்டி மாணவிக்கு 338-வது இடம்


மைக்கேல்பட்டி மாணவிக்கு 338-வது இடம்
x

குடிமைப்பணி தேர்வில் மைக்கேல்பட்டி மாணவி 338-வது இடம் பெற்று முதல் முயற்சியில் சாதனை படைத்து உள்ளார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்.) உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வை 3 நிலைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. முதன்மைத் தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தது.

இந்த தோ்வு முடிவுகளை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டது. இதில் 685 பேர் வெற்றி பெற்று உள்ளதாக மத்திய அரசு தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.இதில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 23) அகில இந்திய அளவில் 338-வது இடம் பெற்றுள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரவி-விக்டோரியா தம்பதியின் மகளான ஏஞ்சலின் ரெனிட்டா முதல் முறையாக மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தொடக்கக் கல்வியை மைக்கேல் பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலும் தமிழ் வழியில் படித்தவர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பொறியியலில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதில் இருந்து தனது ஒரே முயற்சியாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி இந்திய குடிமைப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். இதற்காக முழு நேரமும் தனி பயிற்சிக் கல்லூரி எதிலும் சேராமல் அவ்வப்போது பயிற்சிக் கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று சொந்த முயற்சியில் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

பாராட்டு

ஏஞ்சலின் ரெனிட்டாவின் தந்தை ரவி மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். டிரைவராக தன் வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். தாயார் விக்டோரியா பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஒரு சகோதரர் முதுகலை பொறியியல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டாவை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் பாராட்டினர்.





Next Story