குமரி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை:பெருஞ்சாணி அணைப்பகுதியில் 34 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் கோடை மழை குளிர்வித்தது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை மழை குளிர்வித்தது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கோடை மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் லேசான மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மதிய நேரங்களில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் நகரப் பகுதியில் 2-வது நாளாக நேற்று மதியம் திடீரென வானம் கருமேகக் கூட்டங்களால் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. இடி- மின்னலுமாக காட்சி அளித்தது. பின்னர் சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் வரை பெய்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. அணைப்பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது. இது கோடை வெயிலின் வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
அளவு
பேச்சிப்பாறை அணை- 16.8, பெருஞ்சாணி அணை- 34, சிற்றார்-1 அணை- 20.6, சிற்றார்-2 அணை- 2.2, புத்தன் அணை- 30.2, மாம்பழத்துறையாறு அணை- 1, முக்கடல் அணை- 10, பூதப்பாண்டி- 22.4, கன்னிமார்- 2.2, நாகர்கோவில்- 5, சுருளக்கோடு- 27, தக்கலை- 9.2, பாலமோர்- 4.2, ஆரல்வாய்மொழி- 6.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 244 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 34 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.