ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்
திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர். போட்டியில் பிடிபடாத காளைக்கு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, மதுரை, பாலமேடு, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 490 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
449 காளைகள் பங்கேற்பு
இந்த காளைகளை திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில், கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், ஆய்வாளர்கள் பாலச்சந்திரன், ஆனந்த லட்சுமி, பானுமதி ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்தனர். மொத்தம் 450 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு காளை தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 449 காளைகள் களம் இறங்க அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் மாடுபிடி வீரர்கள் 164 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதில் 13 பேர் வரவில்லை. மீதமுள்ள 151 வீரர்களுக்கு டாக்டர் சிவசுப்பிரமணியன், விக்னேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இதில் 11 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 140 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.50 மணிக்கு கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
போக்கு காட்டிய காளைகள்
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்பு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளுடன் மல்லுகட்டி மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்து பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளி விட்டு பாய்ந்து சென்றன.
34 பேர் காயம்
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 12 பேர், உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 34 பேர் காயம் அடைந்தனர்.
இதில் மேட்டுப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 22), காமலாபுரத்தை சேர்ந்த கணேசன் (32), ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த நவீன் ஆதித்யா (16), ஏ.வெள்ளோட்டை சேர்ந்த விக்னேஷ் (24), அய்யம்பாளையத்தை சேர்ந்த நாகலிங்கம் (26) ஆகிய 5 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரிசுப் பொருட்கள்
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாமல் சென்ற காளைகளுக்கு மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு குத்துவிளக்கு, ஆட்டுக்குட்டி, ஹெல்மெட், சைக்கிள், பிரிட்ஜ், கட்டில், பீரோ, அண்டா, பானை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து யாரிடமும் பிடிபடாமல் ெசன்ற மதுரை மாவட்டம் குலமங்கலத்தை சேர்ந்த வக்கீல் திருப்பதி என்பவருடைய காளைக்கு சிறப்பு பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி தலைமையில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி உள்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை தாசில்தார் தங்கமணி, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.