மழையால் 34 ஆயிரத்து 852 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 34 ஆயிரத்து 852 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு அமைச்சர் மெய்யநாதன் தகவல்
கொள்ளிடம் அருகே வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராமபகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் வீட்டுமனைபட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவித்தனர். தங்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.. இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர், வருவாய்துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளதால் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்திலும் அமைச்சர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கூறுகையில் கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதி, சீர்காழி ஒன்றியகிழக்கு பகுதி, கடற்கரையோர கிராமங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேலைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள் திறக்க முடியாதநிலை உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் 34 ஆயிரத்து 852 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார். இந்த ஆய்வின் போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்.டி.ஓ. அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் உள்பட பலர் உடன் சென்றனர்.