349 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு குறைபாடுகளுடைய 11 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு
வேலூரில் 349 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 11 வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
வேலூர்
வேலூரில் 349 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 11 வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் செல்ல வேன்கள், பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அதன்படி வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நேற்று நடந்தது.
வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், வேலூர் தாசில்தார் செந்தில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு வாகனத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.
குறைபாடுகள்
நேற்று ஒரேநாளில் 349 பஸ்கள் நேதாஜி மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வாகனங்களில் தீயணைப்பான் கருவி, படிக்கட்டுகள் சரியான முறையில் உள்ளதா?, அவசர கால வழி, வேககட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.ஆர்.எஸ். கருவி, முதலுதவி பெட்டி உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 11 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. அதை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீதம் உள்ள சுமார் 240 வாகனங்கள் அடுத்த கட்டமாக ஓரிரு நாட்களில் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.