பட்டியல் இனத்தினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம்


பட்டியல் இனத்தினர் தொழில் தொடங்க 35 சதவீத மூலதன மானியம்
x

பட்டியல் இனத்தினர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க 30 சதவீதமூலதன மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

விழிப்புணர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 3 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

35 சதவீதம் மானியம்

தமிழ்நாடு அரசின் மூலமாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை வணிக நிறுவனங்கள் தொடங்க, விரிவுபடுத்த எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு 35 சதவீத மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை. வயதுவரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்கலாம். டாக்சி மற்றும் லாரி, தேனி வளர்ப்பு மற்றும் அறுவடை உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் சுத்தம் செய்தல் தரப்படுத்துதல் போன்ற அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

தகுதிக்கான திட்ட செலவில் 35 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படுகிறது. 6 சதவீதம் வட்டி மானியம் வங்கிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்த்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கலைச்செல்வி, திட்ட மேலாளர் பாலகோபாலன், மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே.பி.எஸ்.சுகிசிவம், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் த.ரமேஷ், கண்காணிப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story