பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகை மாயம்-போலீசார் விசாரணை
பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி எழுத்தாணிகார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மீனாம்பிகை(வயது 54). சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வெளியூர் சென்று விட்டனர். இந்தநிலையில், இவர்களது வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து, வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றுள்ளனர். அதன்படி, வேலைக்கார பெண் அந்த சாவியை வாங்கி, வீட்டில் உள்ள பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், சுப்பிரமணியன்- மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தனர்.
தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வேலைக்கார பெண் குறித்தும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.