பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் தப்பியது
அரியூரில் கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் தப்பியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியூரில் கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் தப்பியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை முயற்சி
வேலூர் அரியூர் ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது அவரது மனைவியுடன் வேலூரில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோ மற்றும் பல்வேறு இடங்களில் நகை, பணம் ஏதாவது உள்ளதா? என்று தேடி பார்த்துள்ளனர். பீரோவை திறந்த பார்த்த அவர்கள் அதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த உறவினர் ஒருவர் இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் பீரோவில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்களை வெளியே போட்டுச் சென்றுள்ளனர். அந்த பொருட்கள் அனைத்தும் வீட்டில் சிதறி கிடந்தது.
நகை, வெள்ளி பொருட்கள் தப்பியது
போலீசாரின் விசாரணைக்கு பின்னர், பீரோவில் உள்ள ரகசிய அறையில் சுமார் 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போகாமல் இருந்தது தெரியவந்தது. மர்மநபர்களின் கண்களில் படாமல் நகை, வெள்ளி பொருட்கள் இருந்ததால் அவை தப்பியது. அதை கைப்பற்றிய போலீசார் ஜேக்கப்புக்கு தகவல் தெரிவித்து, நகைகளை உறவினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து அரியூர் போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.