சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம்

ஓமலூர்:

திறப்பு விழா

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் மதிப்பில், ரத்த வங்கி கட்டிடம், அதிநவீன உபகரண கட்டிடம், ரூ.25 லட்சம் மதிப்பில் கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரத்த வங்கி கட்டிடம், கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்ட ரூ.1.56 கோடி மதிப்பிலான 7 கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதன்படி சேலம் மாநகராட்சிக்கு 32 மையங்களும், ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் ஆகிய நகராட்சிகளில் தலா ஒவ்வொரு மையமும் விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் 1 டாக்டர், 1 நர்சு, 1 மருந்தாளுனர், 1 உதவியாளர் என்கிற வகையில் இயங்க உள்ளது.

87 சதவீதம்

மேலும் சேலம் மாவட்டத்தில் 22 இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் 87 சதவீதம் மக்களை சென்றடைந்துள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டம் என பல திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விழாவில் ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரமேஷ், செல்வ குமரன், பாலசுப்ரமணியம், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், கருப்பூர் நகர செயலாளர் லோகநாதன், பேரூராட்சி தலைவர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி

தொடர்ந்து எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பிரசவித்த பெண்களுக்கான 16 படுக்கைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான 4 சிறப்பு படுக்கைகள் கொண்ட கட்டிடம், நவீன சமையலறை உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் கூனாண்டியூர், முருங்கபட்டி, சமுத்திரம் மற்றும் மாட்டையாம்பட்டி பகுதியில் புதிதாக தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு மற்றும் எடப்பாடி அடுத்த நாச்சியூர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரோக்கிய நல மைய கட்டிடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மூக்கு கண்ணாடி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொடர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான மருத்துவ பெட்டகம் உள்ளிட்ட நல உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர் சிவலிங்கம், எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எம்.எஸ். பாஷா மற்றும் நல்லதம்பி, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story