கந்தசஷ்டி விழாவுக்கு 350 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு; கலெக்டர் தகவல்


கந்தசஷ்டி விழாவுக்கு 350 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் காண்பதற்காக 350 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் காண்பதற்காக 350 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவும், நகர்ப்பகுதியில் சேரும் குப்பைக்கூளங்களை அவ்வப்போது அகற்றவும், தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க நகர் பகுதி மற்றும் கோவில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்கவும், 24 மணி நேரமும் தூய்மை பணிகள் செய்திடவும், திருச்செந்தூர் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடிக்கு ஆளாகாமல் இருக்கும் பொருட்டு கோவில் வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நகராட்சியின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

சிறப்பு பஸ்கள்- ரெயில்கள்

கோவில் வளாகம், குரும்பூர்-குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம் ஆகியவைகளுக்கு திருவிழா நடைபெறும் 7 நாட்களுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படு உள்ளது. 30-ந் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். சூரசம்ஹாரம் அன்று தென்னக ெரயில்வே மூலம் சென்னை, நெல்லைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கடற்கரைப்பகுதியில் கடல் பாதுகாப்பு வளையத்துடனும், திருவிழா காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு துறையினரும், உயிர்மீட்பு படகுடன் மீன்வளத்துறையினரும் இணைந்து பணிபுரிவார்கள். கந்தசஷ்டி திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

மருத்துவ சிகிச்சை

கோவில் வளாகத்தில் திருவிழா காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடனும், அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியுடன், மருந்துகள் தட்டுப்பாடின்றி இருப்பு வைத்துக்கொள்ள மருத்துவத்துறை நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

திருவிழா காலங்கள் முழுவதும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும், சூரசம்ஹார தினத்தன்று சிறப்பு விருந்தினர்கள் காங்கிரீட் மேடையில் இருந்து நிகழ்ச்சிகளை காண போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story