6 இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் 350 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் தலைமை தாங்கினார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நெய்வேலி
இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே சென்னை கும்பகோணம் சாலையில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, வக்கீல் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், வினோத், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் தேவநாதன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலக செயலாளர் ஜோதி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் உள்பட 70 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் 220 பேர்
இதேபோல் அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்பட 50 பேர், சிதம்பரத்தில் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.எம். குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 80 பேர், வடலூர் நகர செயலாளர் பாபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேர் பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.