357 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்


357 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
x
தினத்தந்தி 9 Oct 2022 9:31 PM IST (Updated: 9 Oct 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

357 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை சி.என்.அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 357 மாற்றுத்திறனாளிகளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால், காதொலி கருவி, கைப்பேசி உள்பட 36 வகையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.என்.அண்ணாதுரை எம்.பி கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி பேசினார்.

அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில் 631 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் திருப்பத்தூர் தொகுதியில் 357 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விரைவில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தி அதற்கான பயனாளிகள் தேர்வு செய்து உபகரணங்கள் வழங்க இருக்கிறோம்.

நமது மாவட்டத்தில் 13 ஆயிரத்து 52 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் 5 ஆயிரத்து 727 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி, தாசில்தார் சிவப்பிரகாசம், முடநீக்கியல் வல்லுனர் இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.


Next Story