ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்தன
சாத்தப்பாடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்த
கல்லக்குடி, ஜூன்.5-
சாத்தப்பாடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஜல்லிக்கட்டு
புள்ளம்பாடி அருகே ஒரத்தூர் ஊராட்சி சாத்தப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணி முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டன.
இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 360 காளைகள் பங்கேற்றன. இதேபோல் 160 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் குமாரசாமி, கிராமதலைவர் செல்வராஜ் முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர் லதாசெந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 6.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதில் சில காளைகள் பிடிபட்டன. சீறிப்பாய்ந்த சில காளைகள் பிடிபடாமல் தன்னை பிடிக்க வந்த மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளியது. காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே அமைக்கப்பட்டு இருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிசுகள்
ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின்உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சில்வர் அண்டாக்கள், சைக்கிள், மிக்சி, குக்கர், ரொக்கம் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தாம்பட்டி கணேஷ்கருப்பையா காளையும், சிறந்த மாடுபிடி வீரர்களாக கீழக்கொளத்தூர் விக்கி, திருமங்கலம் வருண் ஆகியோர் பரிசுகளை பெற்றனர். ஜல்லிக்கட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.