ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி


ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி
x

வேதாரண்யத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாகையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாகையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாஅகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த வழித்தடத்தில் அகல ெரயில் பாதை அமைக்கும் பணி 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் வேதாரண்யத்தில் இருந்து லாரிகள் மூலம் மட்டுமே உப்பு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிறுத்தப்பட்டதால் வருவாய் இழப்பு

அகஸ்தியன் பள்ளியில் இருந்து ரெயில்கள் மூலம் குஜராத், ஆந்திரா, கர்நாடகா போன்ற ெவளிமாநிலங்களுக்கு குறைந்த செலவில் அதிக அளவில் உப்பு மூட்டைகள் அனுப்பப்பட்டு வந்தது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டதால் ெரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

லாரிகள் மூலமாக உப்பு ஏற்றுமதி செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு அதிகமானது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்தது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உப்பு ஏற்றுமதி பின்னடைவு ஏற்பட்டது. அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு

இந்த நிலையில் நாகையில் இருந்து ஆந்திராவுக்கு தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் 3,600 டன் உப்பு சரக்கு ரெயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக வேதாரண்யத்தில் உள்ள உப்பு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இருந்து தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் 3,600 டன் உப்பு லாரிகளில் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொக்லின் எந்திரங்கள் மூலம் உப்பை சரக்கு ரெயிலின் 54 வேகன்களில் ஏற்றினர்.இதை தொடர்ந்து சரக்கு ரெயில் ஆந்திராவிற்கு புறப்பட்டு சென்றது.

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை பணி விரைந்து முடிக்கபட்டால் அகஸ்தியன்பள்ளியில் இருந்து தொடர்ந்து உப்பு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story