37 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன


37 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன
x

குமரி மாவட்டத்தில் 37 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி நம்பிராஜன் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 37 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி நம்பிராஜன் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வருகிற 25 மற்றும் 27-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 8,11,13-ந் தேதிகளிலும் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது.

இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலையில் நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள் முருகன் துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நீதிபதிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், வன நீதிபதி சிவசக்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கங்காராஜ், காசோலை வழக்கு விசாரணை கோர்ட்டு நீதிபதி கீர்த்திகா, சார்பு நீதிபதி அசார் முகமது மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி நம்பிராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

37 ஆயிரம் வழக்குகள்

குமரி மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. உரிமைகளை உரிய முறையில் கோர்ட்டுகளை நாடி பெற்றுக் கொள்வதில் குமரி மாவட்ட மக்கள் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நீதிமன்ற வழக்குகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் குமரி மாவட்டத்தில் 37 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது. வருகிற 25, 27-ந் தேதிகளிலும், ஆகஸ்டு மாதம் 8, 11, 13-ந் தேதிகளிலும் இந்த சிறப்பு நீதிமன்றம் நடைபெறுகிறது. இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குடும்ப பராமரிப்பு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

மேல்முறையீடு செய்ய முடியாது

எனவே வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம். புகார்தாரர் மட்டுமல்ல, எதிர்மனுதாரரும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி வழக்குகளை முடித்துக் கொள்வது தொடர்பாக 10 நாட்களுக்குள் மனு செய்யலாம். மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதி நம்பிராஜன் கூறினார்.


Next Story