37 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்
திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் 37 பெண்களுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
தாலிக்கு தங்கம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி 37 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை வழங்கினார். அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
பொது மக்களுடைய நலன் காப்பதற்காக முதல்-அமைச்சர் நாள்தோறும் ஒவ்வொரு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். பள்ளி கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், அதுமட்டுமின்றி சாலை விபத்துக்கள் ஏற்படும்பொழுது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது மட்டுமின்றி, 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேரம் என்ற திட்டத்தையும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயன்பெற வேண்டும்
அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களும் பொதுமக்களுக்கும் பலன் அளிப்பதாகவும், சாமானிய மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் விஜயா, திருமதி, நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.