3-வது திருமணம் செய்ய முயன்றவருக்கு 37 ஆண்டு சிறை


3-வது திருமணம் செய்ய முயன்றவருக்கு 37 ஆண்டு சிறை
x

முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக சிங்கப்பூர் பெண்ணை மணந்துவிட்டு 3-வது திருமணத்திற்கு முயன்றவருக்கு 37 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த குடும்பத்தினர் 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வசந்தபுரி நகரை சேர்ந்தவர் சோலை கணேசன் (வயது 38). இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது சிங்கப்பூரில் ஆரோக்கிய மேரி என்கிற ஆக்னஸ் சங்கீதா டான்பாஸ் (36) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி அறிமுகமாகி உள்ளார். அதன்பின் ஆரோக்கியமேரியை சோலை கணேசன் கடந்த 25-12-2010 அன்று சிங்கப்பூரில் பதிவு திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தின் போது ரூ.72 லட்சத்து 85 ஆயிரத்தை வரதட்சணையாக ஆரோக்கியமேரி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சோலை கணேசன் சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்தார். இதற்கிடையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் 17 வயது சிறுமியை திருமணத்திற்காக பெண் பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது திருமணத்திற்கு முயற்சி

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்த ஆரோக்கியமேரிக்கு கணவரின் திருமண ஏற்பாடு குறித்த விவரம் தெரியவந்தது. அப்போது அவர் விசாரித்ததில் சோலை கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்திருந்ததும், அந்த திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததும் தெரிந்தது. மேலும் தற்போது 3-வது திருமணத்திற்கு முயன்று வருவதும் தெரியவந்ததால் அவர் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு வந்தார்.

மேலும் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து வரதட்சணை பெற்று மோசடி செய்தது தொடர்பாகவும், 3-வது திருமணத்திற்கு சோலை கணேசன் ஏற்பாடு செய்து வருவது குறித்தும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆரோக்கியமேரி புகார் அளித்தார். அதன்பேரில் சோலை கணேசன், அவரது தாய் ராஜம்மாள், தங்கை கமல ஜோதி, தம்பி முருகேசன், சித்தப்பா நாராயணசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சோலை கணேசனை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் முன்ஜாமீன் பெற்றனர்.

37 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோா்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சோலை கணேசனுக்கு 7 பிரிவுகளுக்கு சேர்த்து மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 5½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இதேபோல உடந்தையாக இருந்த தாய் ராஜம்மாள், தங்கை கமலஜோதி, தம்பி முருகேசன், சித்தப்பா நாராயணசாமி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story