மாவட்டத்தில் 37,457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரையும் நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரையும் நடக்கிறது.
பிளஸ்-2 தேர்வு
பிளஸ்-2 தேர்வை மாவட்டத்தில் உள்ள 323 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 18,734 பேரும், மாணவிகள் 18,723 பேரும் என 37,457 பேர் எழுதுகின்றனர். இதற்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை 326 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 17,056 பேரும், மாணவிகள் 18,223 பேரும் என ஆக 35,279 பேரும் எழுதுகின்றனர். இதற்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து, 30 வழித்தடங்கள் வழியாக ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், நிலையான படை உறுப்பினர்கள் என 3,400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 8 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனி தேர்வர்கள்
இந்த ஆண்டு 352 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளில், கண்பார்வை குறையுள்ள, மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ-மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வை 4 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்கள் 1,231 பேர் எழுதுகின்றனர். இந்த ஆண்டு முதல் மேல்நிலை பொதுத்தேர்வுக்கு உறங்கான்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி புதிய தேர்வு மையமாக அரசு தேர்வுத்துறையால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.