பதுக்கிய 375 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ராஜபாளையத்தில் பதுக்கிய 375 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பதுக்கிய 375 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தேடுதல் வேட்டை 4.0 என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளின் உத்தரவின் பேரில் நேற்று ராஜபாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஒரு குடோனில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 375 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மம்சாபுரத்தை சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 30), வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (23), இசக்கிமுத்து (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேன் பறிமுதல்
பின்னர் அவர்களிடம் இருந்த வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜபாளையம் பகுதியில் புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கல் அதிகரித்து வருவதால் அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.