382 கிலோ வெடி மருந்து பறிமுதல்
காட்டுமன்னார்கோவில் அருகே 382 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் வானவெடி மற்றும் பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குருங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லட்சுமி என்பவர் வெடி தயாரிக்கும் மூலப்பொருட்கள் அதிகளவு வைத்திருப்பதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இவரது உத்தரவுப்படி சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் குருங்குடி கிராமத்திற்கு சென்று லட்சுமியின் வீடு, வானவெடி தயாரிக்கும் கிடங்கு, பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
382 கிலோ வெடி மருந்து
அங்கு பட்டாசு மற்றும் வானவெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான பொட்டாசியம், நைட்ரேட், சல்பர் உள்ளிட்டவைகள் இருந்தன. இதையடுத்து 382 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மூலப்பொருட்களை கிராமத்திற்கு வெளியே உள்ள அவரது பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வைத்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் வேணி முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் லட்சுமி மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.