கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்ணுடன் இயங்கிய 3 கார்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் போலியாக வழங்கப்பட்ட விவகாரத்தில் கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்ணுடன் இயங்கிய 3 கார்களை அதிரடியாக பறிமுதல் செய்து திருப்பூரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
3 கார்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் கூட்டுத்தொகை 8 வருவது போன்ற பதிவு எண்களை போலியாக உருவாக்கி 2-ம் தர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதுபோன்று போலியான பதிவெண்களுடன் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அந்தந்த ஊர்களில் கூட்டுத்தொகை 8 வரும் போலி பதிவு எண்களுடன் வாகனங்கள் இயங்குகிறதா? என்று கண்காணித்து, விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்டு 3 கார்கள் அதுபோன்று போலி பதிவெண்களுடன் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த 3 வாகனங்களும் இடைத்தரகர்கள் மூலமாக வாங்கப்பட்டதாகவும், அந்த வாகனங்களின் பதிவு எண்கள் வட்டார போக்குவரத்து அலுவலக கைபேசி செயலியான (MPARIVAHAN) இருந்ததால் மட்டுமே அதை வாங்கியதாகவும் அதுபோன்று வாகனங்களை வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
போலியான எண்கள்
இதுகுறித்து கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை வாங்கி ஏமாற்றபட்டவர்கள் கூறியதாவது:-
இடைத்தரகர்கள் மூலமாக கார்களை வாங்கிய நாங்கள் பெயர் மாற்றம் செய்வதற்காக திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றபோது, எங்களுடைய கார்களை தணிக்கை செய்த அதிகாரிகள், வாகனங்களில் பதிவு எண் போலியானது என்று தெரிவித்தனர்.
மேலும் உடனடியாக அந்த பதிவு எண்களை ரத்து செய்தும், கார்களை பறிமுதல் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கார்களை வாங்கும்போது வட்டார போக்குவரத்து அலுவலக செயலியான (MPARIVAHAN) பார்த்துதான் வாங்கினோம். எனவே போலி பதிவு எண் வழங்கியவர்கள் மீது துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பதிவு எண்கள் ரத்து
இதுகுறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய் தேவராஜிடம் கேட்டபோது, பொதுவாக கூட்டுத் தொகை 8 வரும் பதிவு எண்கள் பொதுமக்களின் வாகனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதையும் தாண்டி அந்த எண் வேண்டும் என்பவர்கள் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில்தான் இந்த போலி பதிவு எண் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்டு 3 வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளதுடன், அதற்கான பதிவு எண்களை ரத்து செய்துள்ளோம்.
பொதுமக்கள் வாகனங்களை வாங்கும்போது வட்டார போக்குவரத்து அலுவலக செயலியான (MPARIVAHAN) -ஐ பார்த்து வாங்கினாலும், நேஷனல் ரிஜிஸ்டரிலும் அந்த எண்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுமானவரை கூட்டுத் தொகை 8 வரும் வாகனங்களை வாங்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.