நவீன தொழில்நுட்பத்துடன் 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி
வேலூர் கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி முறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
வேலூர் கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி முறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
வேலூர் கோட்டை
வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்றனர். வரலாற்று சின்னமாகவும் வேலூர் கோட்டை திகழ்கிறது.
இந்தக் கோட்டையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக வேலூர் கோட்டையில் ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கு பெரிய அளவிலான புரஜெக்டர் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான பெரியார் பூங்கா அருகே புரஜெக்டர் பாதுகாப்பு அறை கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் கோட்டை வேலூர் மாநகராட்சியின் அடையாளமாக திகழ்கிறது. இந்த கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3டி நிகழ்ச்சி கொண்டுவரப்பட உள்ளது. சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோட்டையின் மதில் சுவர் திரையாக பயன்படுத்தப்படும்.
3டி நிகழ்ச்சி
அதில் வேலூரின் வரலாற்று சார்ந்த நிகழ்வுகள், படங்கள் மற்றும் வீடியோ 3டி முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சீனா, ஜப்பானை தொடர்ந்து இந்தியாவில் வேலூர் கோட்டையில் தான் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு நேரத்தில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து இதை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இங்கு வட மாநிலத்தவர்களும் பலர் வருவதால் வேலூரின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் இந்த வரலாற்று தரவுகள் திரையிடப்படும்.
இவை தத்ரூபமாக இருக்கும். விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.