3 சிறுவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவர்களின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தனர். இறந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் வழங்கினார்.
இறந்த சிறுவனின் பாட்டி கதறல்
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீவிவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட பாபு (வயது 13), மாதேஸ் (15), ஆதீஷ் (8) ஆகிய 3 சிறுவர்கள் பலியானார்கள். சிறுவர்களின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் தெற்கு ரோட்டரி மின்மயானத்தில் சிறுவர்கள் உடல் தகனம் செய்யப்பட்டது.
திருப்பூரை சேர்ந்த மாதேசுக்கு தாய், தந்தை இல்லை. பாட்டி துளசிமணி (வயது 65) மட்டுமே உள்ளார். பேரன் உடலை பார்த்து துளசிமணி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து துளசிமணி கூறும்போது, 'எனது பேரன் நன்றாக படிப்பான். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான், நான் காப்பகத்துக்கு சென்று மாதேசை பார்த்தேன். நன்றாக இருந்தான். படித்து நல்ல வேளைக்கு சென்று சொந்தமாக வீடு கட்டி குடியேறுவோம். நீங்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டாம். நான் சம்பாதித்து உங்களை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றான். இப்படி என்னை தவிக்க விட்டு சென்று விட்டானே. அறிவான பிள்ளை பறிபோய்விட்டதே' என்று கதறி அழுதார்.
காப்பகத்தில் இருக்க பிடிக்கவில்லை
அதுபோல் சிறுவன் ஆதிஷின் தாயார் பூங்கொடி தனது மகனின் உடலை பார்த்து கதறி துடித்தார். அப்போது அவர் கூறும்போது, 'நானும் திருப்பூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்தேன். எனது கணவர் இறந்து விட்டார். மகன் ஆதீஷ், நான் படித்த காப்பகத்தில் தங்கியிருந்தான். அங்கு மாணவர்கள் அதிகம் இருந்ததால் 10 நாட்களுக்கு முன்பு விவேகானந்த சேவாலயத்துக்கு மாற்றினார்கள். எனது மகனுக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை என்று என்னிடம் கூறினான். நானும் எனது மகனை அனுப்பி விடுங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அனுப்பவில்லை. இந்தநிலையில் ஆதீசுக்கு உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் இப்போது அவன் இல்லை. காப்பகத்தில் இருந்து நான் அழைத்துச்சென்றிருந்தால் அவன் என்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டான்' என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
ரூ.2 லட்சம் நிதியுதவி
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், ரூ.2 லட்சத்துக்கான காசோலையை இறந்த சிறுவன் ஆதீசின் தாயார் பூங்கொடியிடம் வழங்கினார். வடக்கு தாசில்தார் கனகராஜ் உடனிருந்தார்.