திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு


திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக   வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கிடையே குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. நேற்றுமுனதினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு ஆகியவற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதை காணமுடிந்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் 19.8 மி.மீட்டர் மழை

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

புத்தன் அணை- 1,பெருஞ்சாணி அணை- 1.4, மாம்பழத்துறையாறு அணை- 3, பூதப்பாண்டி- 5.2, கன்னிமார்- 2.2, கொட்டாரம்- 5.2, மயிலாடி- 12.2, தக்கலை- 3, ஆரல்வாய்மொழி- 13, ஆனைக்கிடங்கு- 4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 19.8 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது.

அணைகளின் நீர்வரத்து

சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் வந்தது. சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 44 கனஅடி நீர் வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 897 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 479 கனஅடி நீரும் வருகிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 5.6 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும், பெருஞ்சாணி மற்றும் பேச்சிப்பாறை அணைகளில் இருந்து பாசனத்திற்காக மொத்தம் 1,183 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீராக வினாடிக்கு 2,014 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.


Next Story