3-வது மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம்


3-வது மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2023 1:15 AM IST (Updated: 29 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் 3-வது மின்இழுவை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. 3 டன் பஞ்சாமிர்த பெட்டிகளை வைத்து இயக்கினர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் யானைப்பாதை, படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இது தவிர பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து எளிதில் சென்றுவர 2 மின்இழுவை ரெயில்கள், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

3-வது மின்இழுவை ரெயில்

இந்தநிலையில் 3-வது மின்இழுவை ரெயிலுக்கு கடந்த ஜனவரி மாதம் நவீன வசதிகளுடன் கூடிய 2 ரெயில் பெட்டிகள் வாங்கப்பட்டன. இதில் ஒரே நேரத்தில் 72 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த நவீன ரெயில் பெட்டிகளை 3-வது தண்டவாளத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரெயில்நிலைய நடைமேடை மாற்றி அமைக்கப்பட்டு ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டன.

பின்னர் 3-வது மின்இழுவை ரெயில் இயக்கத்துக்கு பிரத்யேக 'சாப்ட்டு' வாங்கப்பட்டு, ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டது. அதையடுத்து கடந்த 12-ந்தேதி 3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி முதற்கட்ட சோதனை நடந்தது.

2-ம் கட்ட சோதனை ஓட்டம்

இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து வல்லுனர் குழுவினர் பழனி மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு வந்தனர். பின்னர் 3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி தண்டவாளம், ரோப், 'சாப்ட்டை' பார்வையிட்டனர். இந்நிலையில் நேற்று 3-வது மின்இழுவை ரெயிலில் 2-ம் கட்ட சோதனை நடைபெற்றது. இதில் ரெயில் பெட்டிகளில் சுமார் 3 டன் அளவில் பஞ்சாமிர்த பெட்டிகளை வைத்து இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரெயில் பெட்டிகள், தண்டவாளம், ரோப்பின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, 3-வது மின்இழுவை ரெயிலில் 3 டன் வைத்து சோதனை நடந்தது. வரும் நாட்களில் மேலும் 3 டன் பஞ்சாமிர்த பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.


Next Story