திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நேர காப்பாளரை தாக்கிய 4 போ் கைது
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நேர காப்பாளரை தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கழகத்தின் நேரக் காப்பாளராக பணியாற்றி வருபவர் சிங்காரவேல்(வயது 55). சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது, அரசு பஸ் செல்ல வேண்டிய நேரத்தில் தனியார் மினிபஸ் ஒன்று புறப்பட்டது. அப்போது நேர காப்பாளர் சிங்காரவேல், அந்த மினி பஸ் டிரைவரிடம், ஏன் அரசு பஸ் நேரத்தில் தனியார் பஸ்சை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அன்டராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் செல்வகுமார்(38), கண்டக்டா் கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் வீரகுருசக்தி(24), ஆதரவாளர்கள் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் பிரவீன்குமார், ஆடூர்கொளப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெய்கணேஷ் (27) ஆகியோர் சிங்காரவேலை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.