தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது


தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
x

திருச்சியில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் தொழில்

நாகப்பட்டினம் மாவட்டம் எடையாத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் ஆன்லைன் மூலம் தொழில் செய்து வருகிறார். இந்த தொழிலில் மதுரை அய்யனார்காலனியை சேர்ந்த வினோத்குமார் (36), மதுரை கீழவைசியாராமாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (37), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (36), சிவகங்கை ெகாட்டக்குடி பகுதியை சேர்ந்த ராகவன் (30) ஆகிய 4 பேரும் ரூ.10 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் பாலமுருகன் ஆன்லைனின் கிடைத்த லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தேதி முதலீட்டாளர்கள் 4 பேரும் பாலமுருகனை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று முதலீடு செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து பாலமுருகன் ரூ.20 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

4 பேர் கைது

பின்னர் அவர் திருச்சியில் உள்ள பின்கார்ப் அலுவலகத்தில் உள்ள லாக்கரில் தன்னுடைய தங்க நகைகளை வைத்துள்ளேன். அந்த நகைகளை மீட்டு மீதமுள்ள பணத்தை தந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து வினோத்குமார் உள்பட 4 பேரும் பாலமுருகனை திருச்சியில் உள்ள பின்கார்ப் அலுவலகத்திற்கு கடத்தி வந்தனர். இதனிடையே பாலமுருகன் போலீஸ் அவசர எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார், அந்த அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த வினோத்குமார், ஜெயசீலன், கார்த்திகேயன், ராகவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story