ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கியது 4 பேர் கைது
திருத்தணி அருகே ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சித்தூர் சாலையை சேர்ந்தவர் ராணி (வயது 65). இவருைடய கணவர் வஜ்ஜிரவேலு, வனத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வஜ்ஜிரவேலுக்கு சொந்தமான விவசாய நிலம் தாழவேடு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தில் அரசு அனுமதி பெற்று ராணி, செம்மரம் வளர்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அனுமதி பெற்று அந்த செம்மரத்தை வெட்டி விற்பனை செய்தார்.
இந்த நிலையில் வெட்டி விற்பனை செய்யப்பட்ட செம்மரத்தின் வேர்களை உரிய அனுமதியின்றி தோண்டி எடுத்து அந்த தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தனர். இதைஅறிந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கடம்பநல்லுார் கிராமத்தை சேர்ந்த செம்மரக்கட்டை தரகர் சங்கர் (55) என்பவர் ராணியிடம் செம்மரக்கட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறினார். இதற்கு ராணி சம்மதம் தெரிவித்தார்.
கைது
இதையடுத்து இடைத்தரகர் சங்கர், ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் செம்மரக்கட்டை விற்பனை செய்யும் நபர்களான நாராயணவனம் பகுதியை சேர்ந்த துரைவேலு (52), திருப்பதியை சேர்ந்த நாராயணரெட்டி (47), திருத்தணியை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சீனு (34) ஆகியோருடன் சேர்ந்து தாழவேடு பகுதியில் உள்ள செம்மரக்கட்டைகளை விற்பனை செய்ய திட்டமிட்டார்.
இதற்கிடையில் செம்மரக்கட்டை கடத்துவது குறித்து திருப்பதி செம்மரக்கடத்தல் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, மாவட்ட வனச்சரக அலுவலர் நரசிம்மராவ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார், தாழவேடு பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தனர். அப்போது இவர்கள் 4 பேரும் செம்மரக்கட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றபோது ஆந்திர மாநில தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ரூ.1 கோடி மதிப்பு
விசாரணையில், அரசு அனுமதியின்றி செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையறிந்த தமிழக போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து 4 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.