போலீசாரை மிரட்டிய 4 பேர் கைது
எரியோடு அருகே போலீசாரை மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
எரியோடு அருகே உள்ள மத்தனம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டி (வயது 31). இவர், மும்பையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு இவர் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர், அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்களான பிரசன்னா (24), சிவக்குமார் (24), எலப்பார்பட்டியை சேர்ந்த சிவப்பிரகாஷ் (21) ஆகியோருடன் சேர்ந்து எரியோட்டில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் நடுரோட்டில் பட்டாசுகளை வெடித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் அங்கு பட்டாசு வெடித்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.