மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மின்சாரம் தாக்கி பலி


மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மின்சாரம் தாக்கி பலி
x

வேலூர் சத்துவாச்சாரியில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மிதித்ததால் பரிதாபமாக இறந்து போனது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மிதித்ததால் பரிதாபமாக இறந்து போனது.

சூறாவளி காற்றுடன் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த காற்றுடன் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

வேலூர் மாநகரின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. மின்சார ஊழியர்கள் மின்கம்பம், கம்பிகளில் கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி ஒவ்வொரு பகுதியாக மின்இணைப்பு கொடுத்தனர். சில பகுதிகளில் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. அதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

வேலூர் சேண்பாக்கம் சாய்பாபா கோவில் செல்லும் வழியில் உள்ள 3 மின்கம்பங்கள் சூறாவளி காற்றின் காரணமாக சாய்ந்து கீழே விழுந்தும், பாதியளவு உடைந்தும் காணப்பட்டன. அவற்றை நேற்று மின்சார ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மழையின் காரணமாக 2 குடிசை வீடுகள் பாதியளவு சேதம் அடைந்தன.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூரில் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கே.வி.குப்பம்- 36, காட்பாடி- 34.2, குடியாத்தம்- 22, மேல்ஆலத்தூர்- 19, அம்முண்டி- 5.4.

4 மாடுகள் பலி

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவில் வசிக்கும் வசந்தகுமார், உத்தரமூர்த்தி, சரஸ்வதி, ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளை அந்த பகுதியில் உள்ள கணபதிநகரில் தினமும் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி அந்த பகுதியில் உள்ள வயலுக்கு நேற்று காலை 4 மாடுகளும் சென்றன. வயலில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை எதிர்பாராத விதமாக மாடுகள் மிதித்தன. அதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் அருகே உள்ள கால்வாயில் காணப்பட்ட மீன்களும் மின்சாரம் தாக்கி செத்து மிதந்தன.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளர்கள் அங்கு சென்று அவற்றை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story