ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
வேதாரண்யம் பகுதியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
வேதாரண்யம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், தேத்தாக்குடி தெற்கு, செம்போடை, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து கருப்பம்புலம் தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26 லட்சம் செலவில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்படும் ஆய்வகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
விரைவாக முடிக்க வேண்டும்
பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டார கல்வி அலுவலர் ராஜரத்தினம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பாஸ்கர், ஒன்றிய பொறியாளர்கள் அருள் ராஜன், மணிமாறன், கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.