ரூ.4½ கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி
நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ரூ.4½ கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியையொட்டி 4 மாதம் ரெயில்வே கேட் மூடப்படுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ரூ.4½ கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியையொட்டி 4 மாதம் ரெயில்வே கேட் மூடப்படுகிறது.
நாகர்கோவில் ரெயில் நிலையம்
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ரெயில் நிலையத்தின் பின்புறம் ஊட்டுவாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி உள்ளிட்ட 5 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ரெயில்வே பாதைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடத்திற்கு சென்றுவர புதிய அணுகுசாலை அமைக்கப்பட்டு, அதில் ரெயில்வே கேட்டும் அமைக்கப்பட்டது. இந்த ரெயில்வே கேட் நாள் ஒன்றுக்கு பல முறை அடைத்து திறக்கப்படும். இதனால் ஊட்டுவாழ்மடம், கருப்புபட்டி உள்பட 5 கிராம மக்கள் நாகர்கோவில் மாநகரத்திற்குள் வர கடுமையாக சிரமப்பட்டனர். எனவே அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ரூ.4½ கோடியில் சுரங்கப்பாதை
இதுதொடர்பாக அங்கு ஆய்வு நடத்தப்பட்டு ரூ.4.50 கோடியில் சுரங்கப் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் டெண்டர் விடப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த பணி நடைபெறுவது குறித்து ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் அருகே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், சுரங்கப்பாதை பணிகள் காரணமாக 17-5-2023 முதல் 30-9-2023 வரை தற்காலிகமாக ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பு பேனரை கண்ட அந்த கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், வடிவீஸ்வரம்- ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டை மூடாமல் மாற்று இடத்தில் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.
கிராம மக்கள் அவதி
இதுதொடர்பாக குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊட்டுவாழ்மடம் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றனர். கிராம மக்கள் நாகர்கோவில் மாநகருக்கு செல்ல வடிவீஸ்வரம் வழியாக 1 கி.மீ. தூரம் தான் இருக்கும். ஆனால் தற்போது ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் 4 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைப்பது நல்லது. ஆனால் அதற்காக ரெயில்வே கேட்டை மூட வேண்டாம்.
கேட் மூடப்படுவதால் 5 கிராம மக்கள் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள வடிவீஸ்வரம் செல்வதற்கு பதில் சுசீந்திரம், ரெயில்வே மேம்பாலம், சோழன்திட்டை அணைக்கட்டு வழியாக நாகர்கோவில் வர 4 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்று இடத்தில் ரெயில்வே கேட்
இதனை தவிர்க்க சுரங்கப்பாதை அமைய இருக்கும் வடக்கு பகுதியில் தற்போது ஒரு ரெயில்வே பாதை உள்ளது. இந்த இடத்தில் ரெயில்வே கேட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய சுரங்கப் பாதை பணி முடியும் வரை வடக்கு பகுதியில் உள்ள பாதையில் கிராம மக்கள் செல்ல வசதியாக புதிய ரெயில்வே கேட் அமைத்து, அந்த வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.