ரூ.4¾ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் ரூ.4¾ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கூடலூர்
ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் ரூ.4¾ கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஊட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உல்லத்தியிலும், கூடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடியிலும் ரூ.4 கோடியே 75 லட்சம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உல்லத்தியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் செலவில் தலைக்குந்தா மெயின் ரோடு முதல் எம்.ஜி.ஆர். நகர் வரை சிமெண்டு நடைபாதை மற்றும் சாலையோர தடுப்பு சுவர், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் எம்.ஜி.ஆர். நகர் சலீமா வீடு முதல் மோகன் வீடு வரை நடைபாதை, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கெம்பலை கிராமத்தில் சிமெண்டு நடைபாதை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கல்லட்டி பகுதியில் ரூ.14 லட்சத்து 44 ஆயிரம் செலவில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிட கட்டுமான பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
சுகாதார வளாகம்
இதையடுத்து ரூ.4 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வெட்டு பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கல்லட்டி மெயின் ரோடு முதல் தகன எரியூட்டும் மைதானம் வரை ரூ.7 லட்சத்து 71 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சாலை, வாழைத்தோட்டம் பகுதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாக கட்டிடம், பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை, ரூ.2 லட்சம் செலவில் சோக்பிட் பணியை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
குடிநீர் இணைப்பு
மேலும் பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக கெம்பலை கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 51 வீடுகளுக்கு ரூ.7 லட்சத்து 46 ஆயிரம் செலவில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, ஸ்ரீதர், அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.