உண்டியல் காணிக்கை மூலம் 4½ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 68 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வருகிற பக்தர்கள் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளியிலான பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 11, 12-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
2-வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.
ரூ.4 கோடியே 68 லட்சம்
முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 447 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 384 செலுத்தப்பட்டிருந்தது.
இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 444 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 4 கிலோ 499 (4499) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
2-வது நாளாக நேற்று ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 440 வருவாய் கிடைத்தது. தங்கம் 865 கிராம், வெள்ளி 14 கிலோ 112 கிராம் (14112), வெளிநாட்டு கரன்சிகள் 688-ம் கிடைத்தன.
கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 68 லட்சத்து 98ஆயிரத்து 887 வருவாயாக கிடைத்தது. தங்கம் 1309 கிராம், வெள்ளி 18 கிலோ 611 கிராம் (18611), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1072-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.