அரசு பஸ் மீது கார் மோதல் நடன கலைஞர்கள் 4 பேர் பலி


அரசு பஸ் மீது கார் மோதல் நடன கலைஞர்கள் 4 பேர் பலி
x

நாகர்கோவில் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் நடன கலைஞர்கள் 4 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நடன குழுவினர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலை கிணற்றில் உள்ள ஒரு கோவிலின் திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த குழுவில் 9 ஆண்கள், 3 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

அங்கு நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்ததும் அனைவரும் ஒரு காரில் புறப்பட்டனர். இந்த காரை கைதாகுழி காலனியை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ் (வயது 37) என்பவர் ஓட்டினார். அவருடன் முன் இருக்கையில் கும்பகோடு குழிஞ்சன்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (24), திருவரம்பூர் அம்பான்காளை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அஜித் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.

பஸ் மீது கார் மோதியது

நள்ளிரவு வரை தூங்காமல் இருந்ததால் நடன குழுவினர் அனைவரும் காரில் கடும் அசதியில் இருந்தனர். டிரைவர் மட்டும் காரை ஓட்ட மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் லாயம் விலக்கு பகுதியில் கார் சென்றது.

அப்போது திடீரென கார் டிரைவர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. பஸ்சின் முன்பக்கமும் சேதமடைந்தது.

இந்த பயங்கர விபத்தில் கார் டிரைவர் சதீஷ், அஜித், கண்ணன், குழிச்சான்விளைவீடு பகுதியை சேர்ந்த பீர்கான் மகன் அபிஷேக் என்ற சிஞ்சு (22) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காருக்குள் இருந்த மற்ற 8 பேர் மற்றும் அரசு பஸ்சில் இருந்த ஒரு பயணி என 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரூ.2 லட்சம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் கிராமம் லாயம் விலக்கு பகுதியில் இன்று (நேற்று) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பஸ்சும், திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் வந்த நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story