தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம் தகவல்
x

‘மோக்கா' புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்திரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கோடை மழையும் குறைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று புயலாகவும் உருவானது. இதற்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இது இன்று (வியாழக்கிழமை) தீவிர புயலாகவும், அதன்பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தை கொண்டு வரும் புயல்

எப்போதுமே புயல் என்றாலே மழை அடிக்கும், இடி இடிக்கும் என்றுதான் மக்கள் எண்ண ஓட்டம் இருக்கும். ஆனால் இந்த புயல் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல வருகிறது.

தற்போது உருவாக உள்ள புயலானது மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு இருக்கும் என்பதால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான 4 நாட்கள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த 4 நாட்கள் அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும், காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனல் காற்று வீசும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கும் (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்பநிலை குறித்து வானிலை மையம் குறிப்பிட்டுள்ள 'அசவுகரியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? என்று கேட்டால், இந்த 4 நாட்களும் வெயில் கொளுத்தி எடுக்க போகிறது என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த 4 நாட்களும் ஜன்னலை திறந்தாலும், சாலையில் நடந்தாலும், மின்விசிறியை போட்டாலும் வீசும் காற்றும் அனல் கலந்தே இருக்க போகிறது. ஏற்கனவே வெயிலால் பகலில் தவிக்கும் மக்கள், இனி கூடுதல் புழுக்கத்தால் அவதிப்பட கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுருளக்கோட்டில் அதிக மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ. மழையும், புத்தன் அணை, கிளென்மார்கன், வரட்டுப்பள்ளம், தேக்கடி, விருதுநகர், அடவிநயினார்கோவில் அணையில் தலா 5 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.


Next Story